Saturday, January 19, 2013

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - பிரம்மதேசம் - திருநெல்வேலி


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - பிரம்மதேசம் - திருநெல்வேலி:

பிரம்மதேசம் திருநெல்வேலி மாவட்டத்தில் ,அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஊர். இங்குள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இக்கோவிலின் சிறப்புகளை பற்றி காண்போம்.

இத்திருக்கோவிலின் மூலவர் கைலாசநாதர் , தாயார் பெரியநாயகி, தல விருட்ஷம் இலந்தை.

ஸ்தலபெருமை:

நவகைலாயங்களில் "ஆதிகைலாயம்' எனப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும்.

நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார். தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால் இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது.

கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பதும். தஞ்சை பெரிய கோயில் போல அதிக ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும், கட்டடக்கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.

ஸ்தல வரலாறு:

பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தைமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்தார்.

ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருந்ததைக் கண்டார். பின், அவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி, சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து மனமுருகி வணங்கிய அவர், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனாக இத்தலத்தில் கைலாசநாதர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

No comments:

Post a Comment