Wednesday, January 16, 2013

மலர் : தெரிந்ததும் -தெரியாததும்!!!


மலர் : தெரிந்ததும் -தெரியாததும்!!!


பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்தனர். எனவே, இயற்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.
...
இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட இயலாவண்ணம், மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர்..

வாழும் முறைமைக்கு அடிப்படையான ஐவகைநிலப் பாகுபாட்டை
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
பாலை
எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர்..

இவையே பின்னர், திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று.

பூக்களை உவமையாகவும், உருவகமாகவும் கையாளும் வண்ணம் மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து
நோய் நீக்கவும், தளர்ச்சி போக்கவும், ஊட்டம் பெறவும்
பயன்படுத்தியுள்ளனர்.


பூக்களின் நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என ஐந்து வகையாகப் பகுத்தனர்..

மலருக்கு அடுத்து அலர் என்னும் நிலையையும் பகுத்தனர்.. பூ தோன்றும் நிலை அரும்பு எனப்படுகிறது. மேலும் முல்லை அரும்பு அல்லது மல்லிகை அரும்பு போல் சிறியதாயும் கூர்மையாயும் இருப்பது அரும்பு. அடுக்கு மல்லிகை அரும்பு போல் சற்றுப் பெரியதாகவும் மொட்டையாகவும் இருப்பது மொட்டு. தாமரை அரும்பு போல் பெரிதாக இருப்பது முகை.. இதுவும் பசு முகை, எதிர்முகை, கொழுமுகை என மூவகையாகும்..

பூக்கள் விரியாத நிலையில் இதழ் பொதிந்து இருக்கும். அஃதாவது மகரந்தப் பைகள் அவிழாமல் பொதிந்து இருக்கும்.. அஃதாவது கருவை ஏற்றுக் கொள்ளும் கருப்பை பொதிந்து கிடக்கும். இந்நிலை போது எனப் பெறும். பொதிந்து கிடப்பது போது என்றாயிற்று எனக் கூறலாம்..
(பொதிந்து வைத்தல் என்றால் பொட்டலம் கட்டுவது போல் ஒன்றை உள்ளே வைத்திருத்தல்..)

மல் என்பதற்கு வளம் என்றும் பொருள் உண்டு. எனவே தாவரங்களின் இனப் பெருக்கத்திற்கு அடிப்படையான வளம் உடையதான பூவின் நிலை மலர் எனப்பெறும்..
(இவ்வாறு வளத்தை உருவாக்காதவை - மல் அற்றவை - மலடு எனப்பெறும்..)

மலர்ந்த பின்பு, தேன் நீங்கி மகரந்தம் கெட்டு வாடிப்போன - அலர்ந்து போன - பூ அலர் எனப் பெறும்..

பூ வாடிய நிலை செம்மல் ஆகும்..

மரத்தில் இருந்து உதிர்ந்து கீழே வீழும் பூ வீ எனக் குறிக்கப் பெறும்..

மகரந்தப்பை, கருப்பை முதலியன பூக்களின் அடிப்படை உறுப்புகளாகும்.. இவை உரிய பக்குவ நிலைக்கு வரும்வரை, இவற்றைத் தழுவி இருப்பது, புல்லி எனக் கூறப்பெறுகிறது.. அவ்வாறு புல்லுதல் அல்லாதது (அல்+இ) அல்லி ஆகும்..

சுருக்கமாகக் கூறுவதாயின்,
அகஇதழ் அல்லி என்றும்,
புற இதழ் புல்லி என்றும் சொல்லப்படும்.
பூக்காம்பு - தண்டு சிறியதாக இருப்பது காம்பு எனப்பெறும்..

பருமனாகவும் மென்மையாகவும் இருக்கும் காம்பு தாள் அல்லது தண்டு எனப்பெறும்..

உள்துளையுள்ள காம்பு நாளம் எனப்பெறும்..

அக்காலத்தில் தமிழர்களிடம் இருந்த இந்நுட்பமான அறிவியல் அறிவு, இக்காலத்திலும்கூடப் பிறமொழிகளில் அமையவில்லை..

பூவின் பாகங்கள்:
புல்லி வட்டம்
அல்லி வட்டம்
மகரந்த வட்டம்
சூலகம்
என நான்கு வகைப்படும்..

இவற்றுள் புல்லி வட்டம் பூவின் புற அடுக்காகும். இது பச்சை நிறத்தில் இருக்கும்.

அல்லி வட்டம் என்பது பூவிதழின் தொகுப்பாகும்.

No comments:

Post a Comment