Wednesday, January 16, 2013

கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர்:


கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர்:


திருநெல்வேலியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குள் கோயில் கொண்டிருக்கிறார் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர். நோய் தீர மருத்துவமனை வருபவர்களுக்கு சிரஞ்சீவியாக இருந்து வரம் அளிக்கிறார். கெட்வெல் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் “நலம் பெருக” என்பதாகும். அவ்வார்த்தைக்கேற்ப தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அவரவர் கோரிய பலன்களையும் அதற்கும் மேலாக பல வரங்களையும் தந்து, தனது பெயருக்கேற்றபடி மஹா வரசித்தி ஆஞ்சநேயராக திகழ்கிறார்.

மருத்துவமனையின் பெயரால் கெட்வெல் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுவார். குழந்தை போல காட்சியளிக்கும் இவரை அனுமன் ஜெயந்தியன்று வழிபடுவது மிகவும் பொருத்தம். திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டை ஒட்டி கோயில் உள்ளது. அனுதினமும் இவ்வாலயத்தில் கூடிவரும் பக்தர்களின் எண்ணிக்கையே இதற்குச் சான்று. இதில் பிற மதத்தவர்களும், வெளிநாடு, மற்றும் நெடுந்தொலைவில் இருந்து வரும் பக்தர்களும் அடக்கம்.


ஸ்தல வரலாறு:

ஸீதா பிராட்டியாரை தேடி ஹனுமான் தென்திசை நோக்கி வந்தபோது தாமிரபரணி நதிக்கரையில் தங்கி இவ்விடத்தில் அவர் சந்தியாவந்தனம் (சூரிய நமஸ்காரம்) செய்ததாக கூறப்படுகிறது.

இவ்வாலயம், நெல்லைக்கு பெருமை சேர்க்கும் தாமிரபரணி நதிக்கரையில், கெட்வெல் மருத்துவமனையின் முன் அழகிய அசோகவனம் போன்ற குளுமையான சோலையில் பரமானந்தமாய் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இவ்வாலயம் கெட்வெல் மருத்துவமனைக்கு சொந்தமாய் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் ஆலயமாகும். ஓரொரு கற்பகிரகமும் அதனுள் ஆஞ்சநேய மூர்த்தி, சர்வ வியாதிகளையும் நீக்கும், ரோகஹர விநாயகர் சமேதராக காட்சியளிக்கிறார்.

ஹனுமன் சாக்சாத் சிவனின் அம்சம் ஆவார். இதைக் குறிக்கும் விதத்தில் இத்தலத்தின் மூர்த்தியான ஹனுமன் முழுமையான சிவலிங்க வடிவின் நடுவில் நின்றபடி அருள் செய்கிறார். சிவம் என்றாலே சுபம் என்று அர்த்தம். ஆகவே, இவர் நமக்குச் சுபமும், மங்களமும் தருபவர். இந்த சிவ அனுமன் அமைப்பு உலகில் வேறங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

1. விநாயகரும் ஆஞ்சநேயரும்
2.மேற்க்குத்திசை நோக்கிய முகம்
3.வலது அபயஹஸ்தமும்
4. இடது கையில் கதை ஆயுதம்
5.தெற்கு நோக்கியத் திரும்பிய பாதங்கள்
6.முழுமையான லாங்கூல (வால்) தரிசனம்
7.ஜீவ நேத்திரங்கள்

மேற்கூறிய ஏழு சிறப்பான அம்சங்களும் வேறு எங்கும் காண முடியாத தனிச் சிறப்புடன் நமது சகல குறைகளையும் போக்கி நிறைவளிப்பவை ஆகும்.

No comments:

Post a Comment