Monday, December 10, 2012

காருகுறிச்சி:


காருகுறிச்சி:



திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான காருகுறிச்சி! அழகிய சிற்றூர். இது உலக புகழ் பெற்ற காருகுறிச்சி அருணாசலம் நாகஸ்வர வித்வான் பிறந்த ஊர் ஆகும். ஊருக்குள் நுழைந்தவுடன் குடியானவர்கள் வசிக்கும் பகுதியைக் காணலாம். உள
்ளே வந்தால் கன்னடியன் வாய்க்காலும், குளத்தையும் காணலாம். அதைத்தாண்டி வந்தால் வடக்கு தெற்காக இரண்டு தெருக்கள். ஒன்று கிழக்குத்தெரு; மற்றொன்று மேற்குத்தெரு. இதுதான் அக்கிரகாரப் பகுதி.

ஊரைச்சுற்றி பசுமையான வயல்கள். அவ்வயல்களுக்கு நடுவில் குளக்கரையில் சாஸ்தா கோவில். அந்தக் கரை மேலேயே மேற்கு நோக்கி நடந்தால் வீரவநல்லூருக்குப் போகலாம். மேலத்தெருவில் நுழைந்தவுடன் கிருஷ்ணன் கோவில். மேலத்தெருவின் தெற்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிக்கும் இடையில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. எதிரேயுள்ள குறுக்குச் சந்தில் போனால் சிவன் கோவிலுக்குப் போகலாம்.

மேலத்தெருவின் வடகோடியில் நடுநிலைப்பள்ளி அமைந்திருந்தது. எட்டாவது வகுப்பு வரை மட்டுமே இங்கு படிக்கலாம். மேற்பள்ளிப் படிப்புக்குப் பத்தமடைக்கோ, வீரவநல்லூருக்கோதான் போகவேண்டும். கல்லூரிக்குத் திருநெல்வேலிக்குத்தான் போகவேண்டும். மேலத்தெருவின் தெற்குக்கோடியில்தான் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு எதிர்கரையில் இருந்து சென்றால் 'கொழுந்திருந்தான் மலை' அடிவாரத்தை அடையலாம். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி இது. இங்கு உள்ள மலை, வாய்க்கால், குளத்திற்கெல்லாம் வரலாறு உண்டு.

அனுமன் ஔஷத மலையை இலங்கைக்கு எடுத்துச்சென்றபோது விழுந்த ஒரு சிறிய கல்தான் இந்த கொழுந்திருந்தான் மலையாம்! அதற்கேற்றபடி இந்த மலையில் இப்பொழுதும் மூலிகை மருந்துகள் கிடைக்கிறது.

No comments:

Post a Comment